செவ்வாய், 7 செப்டம்பர், 2010

தியானம்

சிவனடியில்
மொளனமாய்
ஒரு துளி நேரம்
கண்களை மூடி
அகம்பாவத்தை அகற்றி
வெளி உலகத்தை
வெளியே விட்டிட்டு
மனதின் ஆழத்தில்
மூழ்கியடித்து
ஆனந்தமாய்
ஆன்மாவின்
மென்மையான
சங்கீதத்தை கேள்!

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

முயற்சி செய்

மின்னலில் வெளிச்சம் உண்டு
வெளிக் கொணர் திறன் வேண்டும்.

பூமி அடியில் தங்கம் உண்டு
எடுப்பதற்கு உழைப்பு வேண்டும்.

ஒவ்வொரு நெஞ்சிலும் காதல் உண்டு
தூண்டியெழுப்ப அழகு வேண்டும்.

நம் மனதில் கடவுள் உண்டு
பார்ப்பதற்கு கண் வேண்டும்.





திங்கள், 30 ஆகஸ்ட், 2010

Monday Blues

வெள்ளை நிறக் காலை
மெதுவாகத் தழைக்க
சத்தங்கள் அதிகமாகி
தூங்கியிருந்த நகரம்
அரக்கனாய் எழுந்து
நம்மை எல்லாம்
பிசைக்க ஆரம்பித்துவிட
இரண்டு நாள்
விடுமுறைக்குப் பின்
திங்களன்று
உடலுறுப்புக்கள்
அசைய மறுத்துவிட
“யாரடா இந்தத்
திங்கட்கிழமையை
உருவாக்கினது?”
என்று நீங்களும்
கேட்பதுண்டா?

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

ஆன்மீகம்

ஆன்மீகத்தின் அடிப்படை என்ன என்பது நான் சில நேரங்களில் யோசிப்பது உண்டு. அப்பொழுது கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி எனக்கு அடிப்படை கேள்வியாகத் தோன்றவில்லை. மாறாக, மனிதன் வெறும் ஒரு இயந்திரமா அல்லது நமக்குள் உடல் போக ஆன்மா என்ற நாம் பொதுவாக வர்ணிக்கும் ஒன்று இருக்கிறதா என்பதே அடிப்படை கேள்வியாகத் தோன்றுகிறது. கடவுள் இருந்தும் நாம் அவர் இயக்கும் ஆன்மா இல்லாத இயந்திரங்களாக மட்டும் இருந்தோமானால், ஆன்மீகம் அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

ஆக, கடவுளை நம்பாதவன் ஆனால் மனித வாழ்க்கை வெறும் இயந்திர வாழ்க்கை அல்ல என்று நம்புபவன் ஆன்மீகவாதியாக இருக்க இயலும். 

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

உன்னை இல்லாமல்

நீ இல்லாத வாழ்க்கை என்பது ---
நீரற்ற நதியைப் போல்
அழகற்ற அபலைப் போல்
நிலா அற்ற வானத்தைப் போல்
மலரற்ற தோட்டத்தைப் போல்
நபரற்ற நகரைப் போல்
--- உயிரில்லாத உருவம்..

புதன், 25 ஆகஸ்ட், 2010

கவலை கணக்கு

ஒரு நாள் முழுவதும் உங்களுக்கு கவலைகள் வரும்போது ஒரு நோட் புக்கில் அவற்றை எழுதிக்கொண்டே வாருங்கள். பிறகு 10-15 நாட்கள் கழித்து அந்த நோட் புக் கையில் எடுத்து நீங்கள் அன்று கவலைப்பட்டது நியாயமாக இருந்ததா என்பதைப் பாருங்கள். பெரும்பாலும் நாம் காரணம் இல்லாமல் கவலைப்பட்டோம் என்பதே தெரிய வரும்.

அலுவலகம் போய்ச் சேர தாமதம் ஆகிவிட்டதே என்று இடித்துக்கொண்டே போவோம். ஆனால், அலுவலகத்துக்குப் போய்ச் சேர்ந்த பிறகு அதிகாரி உடம்பு சரி இல்லாததால் இன்று அலுவலகம் வருவதாக இல்லை என்று தெரிய வரும். அப்பொழுது நாம் கஷ்டபட்டு வந்தது என்னமோ அவரால் வீணாகப் போய்விட்டதுபோல் நமக்கு அவர் மீது கோபம் வரும்.

இரண்டு கணினிகள் பக்கத்து பக்கத்தில் உள்ளன என்று வைத்துக்கொள்வோம். இரண்டுக்கும் processing capacity சரி சமமாக உள்ளது. ஆனால், ஒரு கணினி எப்பொழுதும், "என்னால் செய்ய முடியுமோ? ஒருவேளை நான் தப்பு தப்பா செய்துவிடுவேனோ? என்னை மூடி பக்கத்திலுள்ள கணினியை மட்டும் வைத்துக்கொள்வார்களோ?" என்று கவலையில் இருக்கிறது. அதன் பாதி processing capacity இவ்வாறு கவலைப்படுவதிலேயே வீணாகிவிடுகிறது. ஆகவே, அதன் செயல்பாடுகளின் தரம் அரைகுறையாகிவிடுகிறது.

கணினி போல்வே, நாம் கவலைப்படும்போது நம் மூளை நாம் செய்கின்ற காரியத்தை முழுமையாக கவனிக்க முடியாமல் அதன் தரம் அரைகுறையாகிறது. பிறகு பக்கத்திலுள்ளவர் நம்மைவிட நன்றாக செய்வதால் நம் கவலைகள் இன்னும் அதிகம் ஆகிவிடுகின்றன.

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

மாற்றம்

அன்று
அவரை மூன்று பத்தாண்டுகள் கழித்து
சந்தித்தபோது
வெள்ளமாக வந்தன
பழைய ஞாபகங்கள்---
வாழ்க்கையின் அந்த தருணத்தில்
உலகு வழிகள் தெரியாதவர்கள்
எவ்வாறு பழகினோம் நண்பர்களாய்
வெற்றி-தோல்வி பாராமல்
ஒருவரை ஒருவர்
சந்தேகிக்காமல்
சொன்ன வார்த்தைகளுக்கு
உள்-அர்த்தத்தைத் தேடாமல்
ஒருவரை ஒருவர் நேசித்தோமே
உரிமை கொண்டாடாமலும்
பிரிந்து விடுவோமோ
என்று பயப்படாமலும்.

இப்பொழுது
மூன்று பத்தாண்டுகள் கழித்து
நாங்கள் இருவரும்
கரப்பான் பூச்சி போல்
ஒவ்வொரு அடியும் எடுக்குமுன்
சுற்றுப்புறத்தை அலசிப் பார்க்க
அனுபவ ரீதியாக
உணர்கொம்புகள் வளர்த்துவிட்டாலும்
என்னவோ அவரைச் சந்தித்தபோது
முப்பது வருடங்களாக திரும்பி
அதே பழைய பாணியில்
முட்டாள்தனமான ஜோக்குகள் சொல்லி
கண்களில் கண்ணீர் வழிய சிரித்தோம்
அந்த ஒரு நாள் மட்டும்
இளமை திரும்பியது.

ஒருவேளை
காலப்போக்கில் மாறுவது
நாம் இல்லையோ
மற்றவரோடு
நாம் பழகும் முறை மட்டும்தானோ.