வெள்ளி, 17 டிசம்பர், 2010

ஸ்பீச் ஃபில்டர்

நாம் மற்றவர்களுடன் பழகும்போது நம் மனதில் தோன்றுவதை அப்படியே சொல்வதில்லை. அதை வடிகட்டி எதைச் சொல்லலாம், எதைச் சொல்ல வேண்டாம், சொல்லப் போவதை எவ்வாறு கூறினால் நன்றாக இருக்கும் என்பதையெல்லாம் அலசிப் பார்த்த பிறகே உதடுகளுக்கு வர அனுமதிக்கிறோம். இந்த வடிகட்டும் செய்முறையைப் புரிந்துகொள்ள ஒரு சிறிய உதாரணம் இதோ

நம் உதாரணத்தில் இருப்பவருமான அவன் மனைவியுடன் அடையாறு பக்கம் போய்க்கொண்டிருந்தபோது மனைவியாகிய அவள் ஒரு பியூட்டி பார்லரில் இறங்கிவிடுகிறாள். ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் அவன் எங்கோ காத்திருக்க வேண்டும். பக்கத்தில் ஒரு நண்பன் பணி செய்யும் அலுவலகம் இருக்கிறதே. அவர் சும்மாதானே உட்கார்ந்துகொண்டிருப்பார். சற்று நேரம் அவரிடம் பேசி வந்தால் ஒரு மணி நேரம் பறந்தே போய்விடும் என்று நினைத்து அவளிடம், “உன் வேலை முடிந்ததும் எனக்கு ஒரு மிஸ்டு கால் கொடுஎன்று சொல்லிவிட்டு நண்பனைப் பார்க்கப் புறப்படுகிறான். அங்கே இருவரின் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும் அவர்கள் வாயால் சொல்லும் கூற்றுக்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்ப்போம். மனதில் ஓடுவது நீல நிறத்திலும், அவர்கள் வாயால் சொல்வது பச்சை நிறத்திலும் எழுதியுள்ளேன்.

(அலுவலக அறைக்குள் அவன் நுழைவதை அவர் பார்க்கிறார்)

அவர்: இவன் எங்கே வந்துட்டான் ? சீக்கிரத்தில போமாட்டானே ! எனக்குத்தான் ஏகப்பட்ட வேலை இருக்கிறதே.
வாங்க, வாங்க. என்ன? ரொம்ப நாளாவே காணோம். ஊருக்குப் போயிருந்தீங்களோ ?

அவன்: நல்ல வேளை. அலுவலகத்திலேயே இருக்கிறார். இல்லைனா இந்த வெயில்லே நா எங்கே சுத்திட்டிருப்பேன் ?
ரொம்ப நாளா உங்களைப் பார்க்க முடியலைன்னு இன்னைக்கு வந்துட்டேன். கொஞ்ச நாளாவே உங்களைப் பார்க்கணும்னு நினைச்சுட்டுருந்தேன். இன்னைக்கு எப்படியாவது பார்த்திடணும்னுதான் புறப்பட்டேன்.

அவர்: நான்தான் நட்புகள் பராமரிப்பதில சோம்பேறி. இவர் பாருங்க என்னைப் பார்ப்பதற்கே இவ்வளவு தூரம் வர்றார். ஆமாம், இவர் வீடு விக்கிறதுக்கு ஆள் தேடிட்டுருந்தாரே. ஒருவேளை நமக்கு கொஞ்சம் சீப்பா கொடுப்பாரோ ? ஆனா, இப்போ அது பத்தி பேச வேண்டாம். இவனை வீட்டுக்கு டின்னருக்கு வரச் சொல்லிப் பேசுவோமே.
பத்து நாளுக்கு முன்னாடி பெரிய பையன் அங்கிள் வீட்டுக்கே வர்றதில்லேன்னு சொல்லிட்டிருந்தான். அப்போ உன் அண்ணியும் ஒரு நாள் தம்பியை டின்னருக்கு வரச் சொல்லச் சொன்னார். இந்த ஸண்டே ஃப்ரீயா இருந்தீங்கன்னா வரலாமே.

அவன்: நல்ல குடும்பம். நான்தான் சரியா இவங்களோடு நட்பு வளர்க்காமே விட்டிட்டேன். இப்போகூட போறதுக்கு வேறே இடம் இல்லைனு இங்கே சுயநலமா வந்தேனே ! இவர் பாருங்க இவ்வளவு நாள் கழிச்சு மீட் பண்ணினாலும் அப்படியே அன்பா இருக்காரு.
கண்டிப்பா வர்றேன். எனக்கு ஒரு பிரச்னையும் இல்லே.

அவர்: குடும்பத்தோடே வாங்க.
குடும்பத்தோடு வரச்சொல்லிட்டேனே ஆனா பொண்டாட்டி திட்டப் போறா. அவளுக்கு ப்ராக்டிகல் ஸென்ஸே இல்லை.ஒரு காரியத்தை எப்படி சாதிக்கணும்னு தெரியாது.

அவன்: நல்ல மனுஷன்.
எல்லாரையும் அழச்சுட்டு வர்றேன்.

அவர்: (மணி அடித்து பியூனை வரச் சொல்லி டீ கொண்டுவர சொல்கிறார்)
இவளுக்குத்தான் மகள் ஒரு பையனோடு ஓடிப் போச்சு. என்ன ஆச்சு தெரியல்லியே.
பாப்பா இன்ஜினியரிங் முடிச்சிட்டாரில்லே ?

அவன்: என்னமோ கேட்க வர்றார். என் மகள் என்ன செய்தாலும் இவருக்கு என்ன ? தேவையில்லாமே இன்னொருவர் விஷயத்தில அக்கறை காட்டுறார் !
எங்கே இருந்தாலும் நல்லபடியா இருக்கட்டும். அதனாலேதான் அந்த வீடே வித்துட்டிருக்கேன். அதே காரணத்தினாலேதான் யாரும் வாங்குறதுக்கே முன் வரமாட்டேங்கிறாங்க.

அவர்: வீட்டுக்கும் அவன் மகள் ஓடிப் போனதுக்கும் என்ன சம்பந்தம் ?
வீட்டுக்கு என்ன பிரச்னை ?

அவன்: எல்லாருக்கும் தெரியுமே. இவருக்கு மட்டும் எப்படித் தெரியாமே போச்சு ?
வீட்டில ஒரு வேலைக்காரி தற்கொலை செய்ததிலிருந்து அங்கே ஏதோ பேய் பிசாசு இருக்குனு எல்லாருமே சொல்றாங்க. என் மனைவியே மூணு நாலு தடவை பார்த்துட்டார். அந்த பேய் தான் என் மகள் புத்திக்கு களங்கம் ஏற்படுத்துடுச்சுனு எல்லாரும் சொல்றாங்க.

அவர்: அடப்பாவி ! பேய் பிசாசு உள்ள வீட்டை வாங்குறதுக்கா அவனை குடும்பத்தோடு டின்னருக்கு வரச்சொல்லிட்டேன் ?

அவன்: (மௌபைலில் மிஸ்டு கால் பார்த்துவிட்டு)
இன்னும் பத்து நிமிஷம்கூட ஆகலே. இப்பவே வந்துட்டாளா ?
சரி நான் புறப்படுறேன். அடுத்த ஸண்டே ஃபாமிலியோடு வீட்டுக்கு டின்னருக்கு வரறேன்.

அவர்: டீ வருதே. அஞ்சு நிமிஷத்திலே டீ சாப்பிட்டு போலாமே.

அவன்: (மொபையிலில் எஸ் எம் எஸ். புறப்பட்டிட்டீங்களா என்று மனைவி கேட்கிறாள். எழுந்துவிடுகிறான்)
சாப்பாடு ரெடியா இருக்கு, உடனே வாங்கனு பொண்டாட்டி எஸ் எம் எஸ் கொடுத்திருக்கிறா. நான் புறப்படுறேன்.

(அவசரமாக வெளியே போகிறார்)

அவர்: என்ன மனுஷன் இவன் ? பொண்டாட்டியை இவ்வளவு பயப்படுறான்! அவ சாப்பாடு ரெடி பண்ணிக் கூப்பிட்டா டீ கூட சாப்பிடாமே ஓடுறான்!

செவ்வாய், 23 நவம்பர், 2010

எச்சரிக்கை

பனிக்கட்டி உருக ஆரம்பித்தால்
தண்ணீர் ஆகி
நீரோட்டமாக எதையெதையோ
தள்ளிக்கொண்டே இஷ்டப்படி
தனக்கு பிடிக்கும்
பாதையைப் பின்பற்றும்.

உணர்ச்சிகளும் அப்படித்தான்
சற்று உஷ்ணத்தைக் கொடுத்தாலே
புறப்பட்டுவிடும் நீரோட்டமாக
எல்லாவற்றையும் தள்ளிக்கொண்டே.

வெள்ளி, 5 நவம்பர், 2010

நீ

நான் இனிமேல்

ஆவதும் அழிவதும்
வாழ்வதும் தாழ்வதும்
உயர்வதும் மறைவதும்
பெறுவதும் இழப்பதும்
வெல்வதும் தோற்பதும்
இணைவதும் சிதறுவதும்
இருப்பதும் சாவதும்

உன்னாலே
உன்னாலேதான் !

புதன், 3 நவம்பர், 2010

நீங்கள் கேட்கத் தயாராக இருந்தால்தான் பேசுவேன் - 2

புதன் நகைச்சுவை:
பல இலக்கிய படைப்பாளர்கள் சிந்திப்பதால்தான் வம்பு வருகிறது என்று சொல்லியுள்ளார்கள். ஜான் கீட்ஸ் ஒரு கவிதையில் நாம் சிந்திப்பதால்தான் சோகமே வருகிறது என்கிறார். ஷேகஸ்பீயர் சிந்திப்பதால் நாம் பலவீனமாகிவிடுகிறோம். அதனால் செயல் குன்றிவிடுகிறது என்று எழுதுகிறார். இலக்கியவாதிகள் சிந்திக்கும் விஷயத்தில் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள் என்பது எனக்கு எந்திரன் படம் பார்த்த பிறகுதான் புரிந்தது.

எந்திரன் படத்தை கடவுள் பிரபஞ்சத்தை உருவாக்குவதற்கு முன்பே பார்த்துவிட்டு சில முக்கியமான விஷயங்களைக் கற்றுக் கொண்டார் என்று நம்புகிறேன். அதனால்தான், அவர் பூமி, கிரகங்கள், மலைகள் ஆகியவற்றுக்கு சிந்தித்து முடிவு செய்யும் சக்தி வழங்கவில்லை. கற்பனை செய்து பாருங்கள், நமது பூமியை நம் அண்ணா சாலையில் வண்டி ஓட்டும் ஓட்டுநர் ஒருவர் ஓட்டினால் என்னவாகும். வேறு எந்த கிரகமும் பக்கத்தில் இல்லையே என்று பூமிக்கு ஸ்பீடு கொடுத்துவிடுவார். நாமெல்லாம் தொப்பி விழப் போகிறதே என்று ஒரு கை தொப்பி மீதும் இன்னொரு கையால் பக்கத்தில் உள்ள் சுவர் அல்லது மேஜையைப் பிடித்து எப்படியாவது வீழ்ந்துவிடாமல் சமாளிப்போம். 

ஏன் இவ்வளவு தூரத்துக்கு சுற்ற வேண்டும் என்று நம் பூமி ஓட்டுநர் சுருக்குப் பாதையைப் பிடித்து 365 நாட்களில் முடிக்க வேண்டிய வருடத்தை 219 நாட்களிலேயே முடித்துவிட்டு சாப்பிடத் தயாராகக் கை காலெல்லாம் கழுவ ஆரம்பிப்பார். இயற்கைக்கு பெரிய சங்கடம் ஏற்பட்டுவிடும். மழைக்காலம் முடிவதற்குள் இலையுதிர் காலம் வராமலேயே நேரடியாக வசந்தம் வந்து முன்பிருந்த இன்னும் உதிராத பூவும் புதியதாக பூத்திருக்கும் பூவும் ஆக ஒரு பூ இருக்க வேண்டிய இடத்தில் இரண்டு பூக்கள் தோன்றி ஒரு உறைக்குள் இரண்டு வாள் கதையாக அவற்றுக்குள் இழுபறி தொடங்கி காயங்கள் ஏற்பட்டு இரத்தத்தில் மிதந்த பூக்களைப் பார்த்து கண்கள் இரத்தக் கண்ணீர் விட நேரிடும்.

மெதுவாக வண்டி ஓட்டும் ஓட்டுநர் வந்துவிட்டால் இன்னும் பெரிய வம்பு. 365 நாட்களில் முடிய வேண்டிய வருடம் 510 நாட்களாக நீடிக்கும். குளிர் காலத்தில் பொந்துகளுக்குள் தூங்கப் போன சின்ன சின்ன ஜந்துக்கள் தன் பொந்து மூடியைத் தூக்கி வெளியே எட்டிப் பார்த்து "இன்னும் குளிர் காலம் முடியவில்லையா?" என்று வியந்து வருத்தப்படுவார்கள். பாவம் !

கடவுள் சரியாக ப்ளான் பண்ணவில்லையானால் இன்னும் எத்தனையோ குழப்பங்கள் நடந்திருக்கக்கூடும். மலைகளுக்கு எந்திரன் மாதிரி உணர்வுகள் கொடுத்திருந்தால் ஒரு பெண் மலையை இரண்டு ஆண் மலைகள் விரட்டிக் கொண்டே ஓடும். அதற்கிடையில் பெண் மலையின் காதலன்-மலை ஊடே வந்து இரண்டு ஆண் மலைகளையும் எதிர்த்து ரஜினி ஸ்டைலில் அங்கேயும் இங்கேயுமாக பெரும்பாறைகள் வீசப்படும். ஊட்டிக்குப் பயணிகளாகப் போயிருப்பவர்கள் கதி என்னவாகும் யோசித்துப் பாருங்கள். 

திரைப்படத்தில் டினோஸார் பார்த்தே பயந்துவிடுகிறோமே. மலைகள் சண்டை போடும் காட்சி எப்படிப் பார்த்திருப்போம். பலருக்கு ஹார்ட் அட்டாக்காகி அப்போலோ போய் சேருவதற்குள் இதயத் துடிப்பு நின்றிருக்கும்.

டினோஸார்கள் சரியான நேரத்தில் போய்விட்டார்கள். இல்லையென்றால், இப்பொழுது நம் கார்களோடு விளையாடிக் கொண்டியிருக்கும். சுட்டால் பிராணி நல அமைப்பினர் நம்மை சூழ்ந்துவிடுவார்கள். "என் காரை சேதப்படுத்திட்டான்," என்று வாதாடினால், "அதற்குதானே இன்ஷுரென்ஸ் இருக்குறது. அதற்காக ஒரு அப்பாவி பிராணியை கொண்ணுடுவீங்களா?" என்று மிரட்டியிருப்பார்கள்.

என்னைக் கேட்டால், என்னமோ இருபத்து நூற்றாண்டான மனிதனுக்காகவே உலகம் இயற்றப்பட்டது போல் தோன்றுகிறது. நம் தலைமுறை வருவதற்கு முன்பே கடவுள் என்னென்னமோ செய்து பயங்கரமான இனங்கள் அனைத்தையும் ஒழித்துவிட்டார். அத்துடன், கோடிக்கணக்கான மரங்களை வீழ்த்து பூமிக்கடியில் லட்சக்கணக்கான வருடங்களாக புதைத்து பெட்ரோலாக மாற்றியுள்ளார்.

"அம்மா, போரடிக்குது. ஒரு ரௌண்ட் சுத்திட்டு வறேன்!" என்று சொல்லி மூன்று மணி நேரம் ஆங்காங்கே காரில் சுற்றும் போது நாம் பயன்படுத்தும் பெட்ரோலை தயார் செய்ய இயற்கை எத்தனை லட்சம் ஆண்டுகள் எடுத்தது என்பதை யோசித்து கூட பார்ப்பதில்லை.

கடவுளின் உலகப்படைப்புத்திட்டத்தின் இன்னொரு அம்சமும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதாவது, நம் தோற்றம் மாறுவதில்லை. இரவு தூங்குபவரின் தோற்றம் காலையில் எழும்போது மாறியிருந்தால் என்ன ஆகியிருக்கும் யோசித்துப் பாருங்கள். ஒரு கம்பெனியில் அடையாள அட்டை கொடுப்பதற்கே பாதி பணம் போய் இருக்கும். தினமும் ஒரு புதிய அடையாள அட்டை. ஆபீஸுக்கு போன ஆள் வீட்டிற்கு திரும்புவதற்குள் தோற்றம் மாறி அவரது தோற்றம் மாறிய மனைவியைப் பார்த்து ஒருவரை ஒருவர் அதே ஆளோடுதான் இருக்கிறோமா என்பதை உறுதிப்படுத்தி பேச்சு தொடங்குவதற்குள் ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்.

இதையெல்லாம் யோசித்து யோசித்து எனக்கும் கீட்ஸ் சொன்னது போல் சோகம் ஏற ஆரம்பிக்கிறது. அதனால், இத்துடன் முடிக்கிறேன். 

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

யார் அவள்?


                   யாரைக் கூப்பிடுகிறது மனம் ?
                   யாருடைய தோற்றம்
                   மூளையில் எங்கோ பதிந்திருந்து
                   திடீரென்று மனத்திரையில் தோன்றி
                   அடையாளம் காண்பதற்குள்
                   மறைந்துவிடுகிறது?

                   ஏன் அழிவதுமில்லை
                   தெளிவதுமில்லை இப்படிமம்?
                   என் உணர்வுகளுடன்
                   கண்ணாமூச்சி விளையாடும்
                   இவள் யார்?

                   ஏன் இவள் தோற்பதுமில்லை
                   ஜெயிப்பதுமில்லை?
                   விளையாடுவது மட்டுமே
                   இவள் நோக்கமோ !