ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

மாற்றம்

அன்று
அவரை மூன்று பத்தாண்டுகள் கழித்து
சந்தித்தபோது
வெள்ளமாக வந்தன
பழைய ஞாபகங்கள்---
வாழ்க்கையின் அந்த தருணத்தில்
உலகு வழிகள் தெரியாதவர்கள்
எவ்வாறு பழகினோம் நண்பர்களாய்
வெற்றி-தோல்வி பாராமல்
ஒருவரை ஒருவர்
சந்தேகிக்காமல்
சொன்ன வார்த்தைகளுக்கு
உள்-அர்த்தத்தைத் தேடாமல்
ஒருவரை ஒருவர் நேசித்தோமே
உரிமை கொண்டாடாமலும்
பிரிந்து விடுவோமோ
என்று பயப்படாமலும்.

இப்பொழுது
மூன்று பத்தாண்டுகள் கழித்து
நாங்கள் இருவரும்
கரப்பான் பூச்சி போல்
ஒவ்வொரு அடியும் எடுக்குமுன்
சுற்றுப்புறத்தை அலசிப் பார்க்க
அனுபவ ரீதியாக
உணர்கொம்புகள் வளர்த்துவிட்டாலும்
என்னவோ அவரைச் சந்தித்தபோது
முப்பது வருடங்களாக திரும்பி
அதே பழைய பாணியில்
முட்டாள்தனமான ஜோக்குகள் சொல்லி
கண்களில் கண்ணீர் வழிய சிரித்தோம்
அந்த ஒரு நாள் மட்டும்
இளமை திரும்பியது.

ஒருவேளை
காலப்போக்கில் மாறுவது
நாம் இல்லையோ
மற்றவரோடு
நாம் பழகும் முறை மட்டும்தானோ.

2 கருத்துகள்:

  1. ஆழமான ஆன்ம உறவுகள் மாற்றங்களுக்கு உட்படுவதில்லை சிதைவதில்லை வடிவங்கள் மாறுவதில்லை அவை என்றும் நினைவலைகளை எழுப்பிக் கொண்டே இருப்பவை. உசுப்பி விட்டால் உற்சாகத்துடன் துள்ளி நம்மோடு ஆனந்தமாய் விளையாடுபவை.வாழ்க்கையின் பொருள் அதுதானே..ஒரு வேண்டுகோள்.. உங்கள் ஓவியங்களையும் இடுகைகளுடன் இணைக்கலாமே..அன்புடன்...
    குமரி எஸ். நீலகண்டன்

    பதிலளிநீக்கு
  2. நன்றி. இது ஒரு ஆரம்பம். இன்னும் சில நாட்களில் நீங்கள் கூறுவதுபோல் ஓவியங்களையும் இணைக்கப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு